search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் மாநில காங்கிரஸ்"

    • தற்போது 2-வது முறையும் கோவிலுக்கு பின்புறம் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது மக்களிடையே மேலும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
    • மக்களை காக்கும் பணிகளில் உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருவண்ணாமலையில், மலைப்பகுதியில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டு மண்ணில் குழந்தைகள் உள்பட 7 பேர் சிக்கியுள்ளார்கள் என்று வரும் தகவல் மிகுந்த அச்சத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டு 24 மணி நேரம் ஆகியும் அவர்கள் மீட்கப்படாதது கவலையளிக்கிறது. தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது 2-வது முறையும் கோவிலுக்கு பின்புறம் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது மக்களிடையே மேலும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

    அதோடு மேலும் நிலச்சரிவு ஏற்பட வாய்புள்ளதாக தகவல் வருகிறது. ஆகவே பேரிடர் மீட்புக் குழுவினர் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை துரிதமாக மீட்கவும், மேலும் பாதிப்பு ஏற்படாதவாறு மக்களை காக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உரிய மருத்துவ உதவிகளையும், நிவாரணமும் வழங்க வேண்டும். மக்களை காக்கும் பணிகளில் உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
    • மழை, கன மழை, அதி கனமழை, புயல் ஆகியவற்றிற்கு ஏற்ப விவசாயப் பயிர்கள் பாதிக்கப்படலாம்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 3 நாட்களாக மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் உட்பட மாநிலத்தில் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சில மாவட்டப் பகுதிகளில் அதி கனமழையும் பெய்து வருகிறது. பெய்த கனமழையால் விளை நிலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் முழுவதும் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அந்த வகையில் டெல்டா மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

    தஞ்சையில் 947 ஹெக்டேர் அளவில் பயிர் சேதம், கடலூரில் 500 ஹெக்டேர் அளவில் பயிர் சேதம், மயிலாடுதுறையில் 3300 ஹெக்டேர் அளவில் பயிர் சேதம், நாகையில் 7600 ஹெக்டேர் அளவில் பயிர் சேதம், ராமநாதபுரத்தில் 800 ஹெக்டேர் அளவில் பயிர்சேதம், திருவாரூரில் 958 ஹெக்டேர் அளவில் பயிர்சேதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் போதிய வடிகால் வசதி இல்லாததும், முறையாக தூர் வாராததும் தான். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சம் 30 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    கனமழையால் நாகை மாவட்டப் பகுதிகளில் 9 ஆயிரம் உப்பளங்கள் நீரில் மூழ்கி, உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு, சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் இன்று (29-ந்தேதி) முதல் டிசம்பர் 1-ந்தேதி வரை கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், சில மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மழை, கன மழை, அதி கனமழை, புயல் ஆகியவற்றிற்கு ஏற்ப விவசாயப் பயிர்கள் பாதிக்கப்படலாம்.

    எனவே தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப மழை வெள்ள புயல் பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்கவும், சேதமடைந்துள்ள பயிர்களுக்கும், உப்பளங்களுக்கும் முழு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பணியாளர்களின் பணிப்பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை தேவை.
    • தற்காலிக பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 31 ஆயிரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை தொகுப்பூதியத்தில் இயக்குபவர்கள் குறைவான ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக 36 ஆயிரம் பேர் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிகிறார்கள். இவர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி நீர்த்தொட்டிகளை பராமரித்து, நீரை சுத்தமாக வைத்துக்கொண்டு, சீராக நீரை வழங்குவது சேவைப்பணியாகும்.

    பணியாளர்களின் பணிப்பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை தேவை. அதாவது மும்முனை மின்சாரம் இரவு நேரங்களில் 10 மணிக்கு வழங்கப்படும் போது காத்திருந்து மின் மோட்டாரை இயக்கி நீரேற்றுகிறார்கள். அவர்களுக்கு டார்ச் லைட்டும் பாதுகாப்புக்கு ரப்பர் கையுறைகளையும் வழங்க வேண்டும்.

    மேலும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும். பணியில் இருக்கும் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும். எனவே தமிழக அரசு, ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பவர் பம்பு இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோரது கோரிக்கைகளான பணிப்பாது காப்பு, பணி நிரந்தரம், பணிக்கொடை, வாரிசுகளுக்கு பணி, ஓய்வூதியம் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வீடு, நிலம் வாங்குவோர்களுக்கு சுமை அதிகமாகும்.
    • மக்களின் மீது பொருளாதார சுமையை ஏற்கனவே உயர்த்தியதை கவனத்தில் கொண்டு முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வழிகளில் மக்கள் மீது பொருளாதார சுமையை ஏற்றி வருவது ஏற்புடையதல்ல. ஏற்கனவே தமிழக அரசு நிலத்தின் வழிகாட்டி மதிப்பை மாற்றியமைத்த நிலையில், தற்போது முத்திரைத்தாள் கட்டணத்தையும் பத்து மடங்கு உயர்த்தியுள்ளது. இதனால் வீடு, நிலம் வாங்குவோர்களுக்கு சுமை அதிகமாகும்.

    தமிழக அரசு பதிவுத் துறையின் மூலம் மக்களுக்கு அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தியதால் தற்போதைய பொருளாதார சிரமத்தில் இருக்கும் மக்களுக்கு கூடுதல் பொருளாதார சுமை ஏற்படும். முத்திரைத்தாள் கட்ட ணம் மூலமாக அரசாங்கம் வருவாயைப் பெருக்க நினைப்பதை விட மக்களின் மீது பொருளாதார சுமையை ஏற்கனவே உயர்த்தியதை கவனத்தில் கொண்டு முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிழை என்பதே வரும் நாட்களில் எந்த விழாக்களிலும் இருக்கக்கூடாது.
    • தேவைப்பட்டால் இதற்குண்டான ஒத்திகை எடுப்பதும் முக்கியம்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேசிய கீதம் இந்தியாவிற்கு எப்படி பெருமை சேர்க்கிறதோ அதே போல தமிழ்த்தாய் வாழ்த்தும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது. இதனுடைய வரிகள், உச்சரிப்பு பாடும் போது மிக முக்கியம். இதில் பிழை என்பதே வரும் நாட்களில் எந்த விழாக்களிலும் இருக்கக்கூடாது. தேவைப்பட்டால் இதற்குண்டான ஒத்திகை எடுப்பதும் முக்கியம். தமிழ்த்தாய் வாழ்த்தில் அரசியல் கூடாது.

    இதனுடைய நோக்கமே தமிழ்நாடு, தமிழ்வளர்ச்சி, தமிழ்பற்று. இதில் தவறு கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆதாயத்திற்கும், விளம்பரத்திற்கும் மட்டுமே இருக்கக்கூடும். தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் பாடல்கள் என்பதால் சரியாகப் பாட வேண்டும் என்பதையே குறிக்கோளாகக்கொண்டு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மழை, புயல், வெள்ளம் ஏற்படவும் வாய்ப்புண்டு.
    • மக்களைப் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான, துரிதமான, முறையான, சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தற்போதைய வானிலை ஆய்வு மைய அறிவிப்புப்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு மாநிலத்தில் ஆங்காங்கே சில மாவட்டங்களில் மழையும், பல மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதே போல காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மழை, புயல், வெள்ளம் ஏற்படவும் வாய்ப்புண்டு.

    இந்நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் பெய்த மழை, கனமழை, புயல், வெள்ளம் ஆகியவற்றையும் அதனால் மக்கள், கால்நடைகள், விளைநிலங்கள் அடைந்த பாதிப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    கடந்த கால மழைக் கால அனுபவங்களை, சிரமங்களை, பாதிப்புகளை மனதில் வைத்து தமிழக அரசு சென்னை உட்பட மாநிலத்தில்மழை வெள்ளப் புயலால் பாதிக்கும் மாவட்ட மக்களைப் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான, துரிதமான, முறையான, சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விவசாயிகளைப் பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் பணியாகும்.
    • மழை வெள்ளத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு விவசாயிகளுக்கு துணை நிற்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பருவ மழை தொடங்கி இருப்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள வடிகால்களை முறையாக கண்காணித்து, சரி செய்து, தயார் நிலையில் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்துகொண்டு பயிர்களை பாதுகாக்க வேண்டும்.

    குறிப்பாக டெல்டா மாவட்டப்பகுதிகளில் காவிரி பாசனப் பகுதிகளில் வடிகால்கள் மண் எக்கல் அடித்து நீர் வடிவதற்கு வழியில்லாமல் உள்ளது. எனவே அப்பகுதிகளில் மண்ணை தூர்வாரி மழைநீர் வடிவதற்கான வகையில் ஏற்பாடு செய்து கொடுத்து விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும். தமிழக அரசு கடந்த கால பருவ மழையின் போது விவசாய நிலங்கள், பயிர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டதை கவனத்தில் கொண்டு அதற்கேற்றவாறு முன்னேற்பாடான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    எனவே மழைக்காலப் பாதிப்பில் இருந்து விவசாய நிலங்களை, பயிர்களை, விவசாயிகளைப் பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் பணியாகும்.

    மேலும் தமிழக அரசு தொடர்ந்து மழைப்பெய்ய இருக்கின்ற வேளையில் மழை வெள்ளத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு விவசாயிகளுக்கு துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உரிமம் இல்லாமல் பட்டாசுகள் தயாரிக்கக்கூடாது என்பதை தமிழக அரசு கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
    • பட்டாசுத் தயாரிப்பில் கவனமின்மை, பாதுகாப்பற்ற தன்மை ஆகியவற்றால் உயிர் போவது இனிமேல் தொடராமல் இருக்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி நேரத்தில் பட்டாசுத் தொழில் மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக முறைகேடான வழியில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உரிமம் இல்லாமல் வெடிகள் தயாரிக்கக்கூடாது என்பதை பட்டாசுத் தொழிலில் ஈடுபடுவோரும் மிக முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும்.

    உரிமம் இல்லாமல் பட்டாசுகள் தயாரிக்கக்கூடாது என்பதை தமிழக அரசு கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    பட்டாசுத் தயாரிப்பில் கவனமின்மை, பாதுகாப்பற்ற தன்மை ஆகியவற்றால் உயிர் போவது இனிமேல் தொடராமல் இருக்க வேண்டும். அதற்காக வெடி தயாரிக்கும் நிறுவனத்தினர், பொது மக்கள், அரசு அதிகாரிகள் என அனைவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சுமார் 90 சதவிகித சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகத் தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து 12 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஊதியத்தை உயர்த்தி வழங்கிட, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைத்திட, 9 மணி நேரத்திற்கும் அதிகமாக நீளும் பணிநேரத்தைக் குறைத்திட உள்ளிட்ட நியாயமான பல கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 90 சதவிகித சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சாம்சங் தொழிற்சாலை சம்பந்தமாக, தொழிலாளர்கள் போராட்டம் சம்பந்தமாக, தீபாவளி போனஸ் சம்பந்தமாக உடனடியாக தமிழக அரசின் சார்பில் ஒரு குழு, சாம்சங் நிறுவனத்தின் சார்பில் ஒரு குழு, தொழிலாளர்கள் சார்பில் ஒரு குழு அமைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இப்பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகத் தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மத்திய அரசு இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும், படகுகளையும் மீட்க வேண்டும்.
    • மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட 45 தமிழக மீனவர்களை அபராதம் இல்லாமல் மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அராஜகத்தை இலங்கை அரசிடம் கண்டித்து, இது போன்ற செயல்கள் இனி தொடரக்கூடாது என்பதை உறுதிப்பட தெரிவிக்க வேண்டும்.

    மத்திய அரசு இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும், படகுகளையும் மீட்க வேண்டும்.

    தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலானது இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மத்திய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகிறது. பல ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மது கடைகளை படிப்படியாக மூடுவதற்கான சரியான தருணமாகும். மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மதுவில்லா தமிழகத்தை செயல்படுத்த வேண்டும் என்று 2015-ம் ஆண்டு எனது தலைமையில் ஒரு கோடி கையெழுத்து பெற பட்டது. அதை நான் தற்போது நினைவு கூற விரும்புகிறேன். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு அதிகரித்து வருகிறது. இதற்கு டாஸ்மார்க், போதை பொருட்கள் முக்கிய காரணமாக இருக்கிறது.

    மக்கள் அரசு மீது நம்பிக்கை இழந்து உள்ளனர். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடும் விதத்தில் அக்டோபர் 2-ந்தேதி முதல் அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். போதைப் பழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

    நிபா வைரஸ் கேரளாவில் அதிகரித்து வருகிறது. கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை தடுக்க தமிழக சுகாதாரத்துறையும் குமரி மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    கிராமங்கள், நகரங்களில் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமவள கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். போதை பொருள் பழக்கத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். பள்ளி- கல்லூரி மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு நன்னெறி வகுப்புகள் அவசியமாகும். போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துனர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஏப்ரல், மே மாதத்தில் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தப்படும் என்று தெரிகிறது. சொத்து வரியை உயர்த்துவதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை கைவிட வேண்டும்.

    முதல்வரின் வெளிநாட்டு பயணம் ஆக்கபூர்வமான பயணமா என்பது கேள்விக்குறி தான். நம்மைவிட சிறிய மாநிலங்களானான கர்நாடகா, தெலுங்கானா முதல்வர்கள் வெளிநாட்டு பயணத்தின் முலம் அதிக முதலீடுகளை பெற்று வந்துள்ளனர். மீனவர்கள் அச்சமின்றி கடலுக்கு சென்று மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகிறது. பல ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காப்பீடு திட்டம், வீடு கட்டும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவது பாராட்டுதலுக்குரியதாகும். த.மா.கா. உறுப்பினர் சேர்க்கை பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 1-ந்தேதி முதல் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அக்டோபர் 15-ந்தேதி வரை இந்த பணி நடைபெறும். மாவட்ட, மாநில நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கை பணியை முடித்து அக்டோபர் 20-ந் தேதிக்குள் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இந்த உறுப்பினர் சேர்க்கை 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு வலுசேர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.

    த.மா.கா. உறுப்பினரின் குரலும் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது மாநில அரசு தான். மத்திய அரசு என்று ஏமாற்றக்கூடாது. பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறிவிட்டு தற்பொழுது மதுக்கடைகளை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு வருகின்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் தான் என்கவுண்டர் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தென் மாநிலங்களிலேயே அதிக அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பது தமிழகத்தில் தான் என்பது வேதனையான செயலாகும்.

    தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வாக்காளர்களை ஏமாற்றி வருகிறார்கள்.



    தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தது பற்றி கேட்கிறீர்கள். புதிய கட்சிகளாக இருந்தாலும் சரி பழைய கட்சிகளாக இருந்தாலும் சரி மக்கள் அதன் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பழைய கட்சிகளாக இருந்தாலும் புதிய கட்சிகளாக இருந்தாலும் அதன் செயல்பாடுகளை பொருத்தே வரும் காலங்களில் மக்கள் வாக்களிப்பார்கள்.

    விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடக்கிறது. மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களை அழைத்து மாநாடு நடத்துவது ஆச்சரியமாக உள்ளது. புதிராக உள்ளது. எல்லா கட்சிகளுக்குமே கூட்டணி மற்றும் ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதை வெளிப்படையாக கூற தயங்குகிறார்கள். அது கூட்டணி கட்சியின் மீது உள்ள மரியாதையா, பயமா என்று தெரியவில்லை. கோவையில் நடந்த ஜி.எஸ்.டி. மாநாட்டில் நிதி மந்திரி, தொழில் அதிபர்கள், வியாபாரிகளை அழைத்து கருத்துக்களை கேட்டார்.

    அந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான அரசியல் செய்ய வேண்டுமே தவிர காழ்ப்புணர்ச்சியுடன் அரசியல் செய்யக்கூடாது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடுசெய்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் எந்தெந்த மாநிலங்களில் செய்யப்பட்டுள்ளது. அந்த திட்டங்களுக்கு மத்திய அரசு சரியாக நிதி வழங்கி வருகிறது. நிறைவேற்றாத திட்டங்களுக்கு தான் நிதி வழங்கவில்லை. மத்திய அரசின் சார்பில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு நிதி வழங்கவில்லை என்று கூறினால் நானே டெல்லியில் மத்திய அரசை வலியுறுத்த தயாராக உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடின உழைப்பு, விடா முயற்சி, தொடர் பயிற்சி ஆகியவற்றால் வீரர், வீராங்கனைகள் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள்.
    • வீரர், வீராங்கனைகளின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்ட பெற்றோர்களையும், பயிற்சியாளர்களையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து வரும் பாராஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10 மீ. ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகரா முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

    இந்திய வீராங்கனை ப்ரித்தி பால் 100 மீ. டி35 ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கமும், 10 மீ. ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் மனீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கமும் வென்றிருப்பது பெருமைக்குரியது.

    கடின உழைப்பு, விடா முயற்சி, தொடர் பயிற்சி ஆகியவற்றால் வீரர், வீராங்கனைகள் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள். வீரர், வீராங்கனைகளின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்ட பெற்றோர்களையும், பயிற்சியாளர்களையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×